Monday, May 24, 2010

மிஸ்ஸிங் .....!!!

அன்று
சாப்பிடும் போது உனக்கு
அந்த விக்கல் கூட
என்னை நினைத்து என்றாய் ......
இன்றோ !
சாப்பாட்டில் உப்பு
தூக்கல் என்றால் கூட
தூக்கி எறிகின்றாய்
சாப்பாட்டை மட்டுமல்ல
என்னையும் தான் ................
அன்று என்
தலைமுடி காற்றில் கலைந்தாலும்
ஏனோ கவலை கொள்வாய் ...........
இன்றோ
கண்கள் கலங்கினாலும்
கண்டு கொள்வதில்லை ...........
புரியவில்லை எனக்கு ..!!!!
காலங்கள் கடந்து போனால்
காணாமலா போகும்
காதல் .............??????

Tuesday, May 11, 2010

நெஞ்சின் பலவீனம்

ஆசை நெஞ்சே !
மோசம் செய்யாதே
கிடைக்காததை நினைத்தாய் !
கிடைக்குமென்று நம்பினாய் !
கிட்டேயிருந்து எண்ணினாய் !
தூரே கண்டு மகிழ்ந்தாய் !
சிறு வார்த்தையால் பேரமுதானாய் !
பெறு வார்த்தையால் ஆனந்தக் கடலிலானாய் !
கதைப்பதைக் கனவாக்கினாய் !
காண்பதை நினைவாக்கினாய் !
காலம் கடந்து ஞானம் பெற்றாய் !
அதன் பின் தெளிவு பெற்றாய் !
உள்ளம் எண்ணியது
உடல் மகிழ்ந்தது
வேலைகளை வீணாக்கியது
கால்நோகக் காத்திருந்தது
இத்தனையும் காலத்தை
வீணாக்கப் பயன்படுத்திய
அற்ப நெஞ்சின் பலயீனம் !

ஒ ! நெஞ்சே ! பலயீனம் அடையாதே !
உடன் நம்பி நடக்காதே !
உடந்தையாய் வீணாக்காதே !
நெஞ்சே !
இனியாவது பார்த்து நட ....!

Sunday, May 2, 2010

எறும்புகளோடு ஓர் பேச்சு வார்த்தை

எறும்புகளே! எறும்புகளே !
உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே !

பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே
பூமியில் ஊர்ந்த பூச்சியினமே !

உலகின் மிகச் சிறிய ஆச்சரியமே !

உங்களோடு பேச வேண்டும்
சிறிது நேரம் செவிசாய்ப்பீரா?

" நின்றுபேசி நேரங்கழிக்க
நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை
எது கேட்பதாயினும்
எம்மோடு ஊர்ந்து வாரும் "

ஒரு சென்ட்டி மீட்டரில்
ஊற்றி வைத்த உலகமே !

அற்ப உயிரென்று
அவலப்பட்டதுண்டா ?

" பேதை மனிதரே !
மில்லி மீட்டர் அளவிலும்
எம்மினத்தில் உயிருண்டு
தன் எடை போல ஐம்பது மடங்கு
எறும்பு சுமக்கும்
நீர் சுமப்பீரா ? "

உங்கள் பொழுது போக்கு ..........?

" வாழ்வே பொழுது போக்கு
தேடலே விளையாட்டு
ஊர்தலே ஓய்வு

ஆறு முதல் பத்து வாரம்
ஆயுள் கொண்ட வாழ்வு - இதில்
ஓய்வென்ன ஓய்வு - தலை
சாய்வென்ன சாய்வு ? "

இந்த ஆயுளுக்கா
இத்தனை பாடு?

" உம்மைப் போல எமக்கு
ஒற்றை வயிறல்ல
இரட்டை வயிறு

செரிக்க ஒன்று
சேமிக்க ஒன்று

செரிக்கும் வயிறு எமக்கு
சேமிக்கும் வயிறு
இன்னோர் எறும்புக்கு

இரண்டு வயிற்றுக்குத்தான்
இத்தனை பாடு "

இனப் பெருமை பற்றிச்
சிறுகுறிப்பு வரைக ........

" சிந்து சமவெளிக்கு முற்பட்டது எங்கள்
பொந்து சமவெளி நாகரிகம்
ராணிக்கென்று அந்தப்புரம் -
உழைக்கும் எறும்புகள் வசிப்பறை -
இறந்த எறும்பை அடக்கம் செய்ய
இடிபாடில்லா இடுகாடு -
மாரிகாலச் சேமிப்புக்கிடங்கு -
எல்லாம் அமைந்தது எங்கள் ராஜாங்கம்

எங்கள் வாழ்கையின்
நீளமான நகல் தான் நீங்கள் "

உங்களையே நீங்கள்
வியந்து கொள்வதெப்போது ?

மயிலிறகால் அடித்தாலே
மாய்ந்து விடும் எங்கள்
மத யானைக்குள் புகுந்து
மாய்த்து விடும் போது "

நீங்கள் வெறுப்பது .... நேசிப்பது ......?

" வெறுப்பது -

வாசல் தெளிக்கையில்

வந்து விழும் கடல்களை

நேசிப்பது -

அரிசிமாக் கோலமிடும்

அன்னப் பூரணிகளை

சேமிக்கும் தானியம்

முளை கொண்டால் ஏதுசெய்வீர் ...?

" கவரும் போதே தானியங்களுக்கு

கருத்தடை செய்து விடுகிறோம்

முனைகளைந்த மணிகள்

முளைப்பதில்லை மனிதா ! "

உங்களால் மறக்க முடியாதது .....?

" உங்கள் அகிம்சைப் போராட்ட

ஊர்வலத்தில்

எங்கள் நான்காயிரம் முன்னோர்கள்

நசுங்கிச் செத்தது "

எதிர்வரும் எறும்புகளை
மூக்கோடு மூக்குரசும் காரணம் ....?


" எங்கள் காலனி எறும்புதானாவென
மோப்பம் பிடிக்கும் முயற்சியது

எம்மவர் என்றால்
வழி விடுவோம்
அன்னியர் என்றால்
தலையிடுவோம் "

சிறிய மூர்த்திகளே - உங்கள்
பெரிய கீர்த்தி எது....?


" அமேஸான் காட்டு ராணுவ எறும்புகள்
யானை - வழியில் இறந்து கிடந்தால்
முழுயானை தின்றே முன்னேறுவோம்

மறவாதீர் !
எறும்புகளின் வயிறு
யானைகளின் கல்லறை "


சாத்வீகம் தானே உங்கள்
வாழ்க்கை முறை ...........?
" இல்லை
எங்களுக்குள்ளும் வழிப்பறி உண்டு
எங்களுக்குள்ளும் யுத்தங்கள் உண்டு
அபாயம் அறிவிக்க
சத்தம் எழுப்பி
சைகை செய்வதுண்டு "
எறும்புகளின் சத்தமா
இதுவரை கேட்டதில்லை ........
" மனிதர்கள் செவிடாயிருந்தால்
எறும்புகள் என்ன செய்யும் ..?"

நன்றி எறும்பே நன்றி
" நாங்கள் சொல்ல வேண்டும்
நன்றி உமக்கு "
எதற்கு ? எதற்கு ?
" காணாத காமதேனு பற்றி
இல்லாத ஆதிசேஷன் பற்றி
பொய்யில் நனைந்த
புராணம் வளர்க்கும் நீங்கள்
இருக்கும் எங்களைப் பற்றி
இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே
அதற்கு "