Friday, April 23, 2010



ஒரு துக்க நாள்

அன்று
ஜன்னல்களை அடைத்து
சிறு வெளிச்சமும் தீண்டி விடாதபடி
அறையை இருட்டாக்கி இருந்தேன் .......

மின் விசிறி சுழலவில்லை
உடலிலிருந்து வெளியேறிய
துக்க வெப்பம்
இருள் வெளியை நிறைத்திருந்தது ........

பத்து முறையேனும் குளித்திருப்பேன்
எல்லாமே அவசரக் குளியல்
தண்ணீரை ஊற்றி ஊற்றி அழித்ததில்
அழியவில்லை ஏமாற்றம் ...
பூமியை விழுங்கி விட்டதைப் போல
உள்ளுக்குள் உடல்
பரமாகியிருந்தது............
தடித்த போர்வையை இழுத்துப் போர்த்தினேன்
கைகளை இணைத்து
மடித்து ஒருக்களித்திருந்த
கால்களுக்கிடையில் பதுக்கிக் கொண்டேன்
எனக்குள் நானே போய்விடுமளவு
உடலைக் குறுக்கித் துவண்டிருந்தேன் .....
என் சுவாச ஒலியே
பேரிரைச்சலாக கேட்டதேனக்கு
மூச்சை அவ்வப்போது
அழுத்தமாக அடக்கினேன்
அப்படியே தூங்கியிருக்க வேண்டும் நான் ......
கண்களை இறுக மூடிய போது
கைப்பற்றித் தலை சாய்த்துக் கொண்ட நாட்கள்
கொடுந்தீயாய் நிழலாடின ...........
என்னைச் சுற்றிலும்
இறந்து கிடந்த கடிதங்களிலிருந்து
உயிரற்ற வார்த்தைகள்
உதிர்ந்து மலையளவு
குவிந்து விட்டது ..........
அதில் நான் மூழ்கிப் போகவிருந்தேன்
மூச்சு நெரிய
அடக்கமாட்டாமல்
அழத்தொடங்கியிருந்த நேரம் .........
அந்த நாள் முடிந்து போயிருந்தது
அறையெங்கும் காதல்
அலங்கோலமாய் கிடந்தது ........

Thursday, April 15, 2010

தூது

காற்றுக்கு தூது விட்டேன்
தென்றலாய் உரசிச் சென்றது ........
நிலவுக்கு தூது விட்டேன்
ஒளியாய் வீசிச் சென்றது .................
கடலுக்குத் தூது விட்டேன்
அலையாய் வந்து போனது ..............
தண்ணீருக்கு தூது விட்டேன்
மழைத்துளியாய் கொட்டிச் சென்றது ........
உன் மனசுக்கு தூது விட்டேன்
அதை நீ தெருக்குப்பையில்
வீசிச் சென்றாய் ......